பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு
கும்பகோணத்தில் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 5 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
கும்பகோணம்;
கும்பகோணத்தில் பள்ளி வாகனங்களை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார். அப்போது 5 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
கும்பகோணம் பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளில் மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி கல்லூரி வாகனங்களை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.கும்பகோணம் சரகத்துக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவ மாணவிகளை ஏற்றி செல்லும் பள்ளி கல்லூரி வாகனங்களில் உரிய பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா நேற்று காலை வாகனங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
5 வாகங்கள் தகுதி நீக்கம்
கும்பகோணம் அரசினர் தன்னாட்சி ஆண்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில் கும்பகோணம் சரகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளைச் சேர்ந்த மொத்தம் 205 வாகனங்களில் 164 வாகனங்கள் ஆய்வுக்காக கொண்டுவரப்பட்டது.இந்த வாகனங்களை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா மற்றும் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தாமரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு வாகனங்களில் பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் வாகனங்களின் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு செய்தனர். இதில் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத 5 வாகனங்களை தகுதி நீக்கம் செய்து கோட்டாட்சியர் பூர்ணிமா உத்தரவிட்டார்.
உத்தரவு
இந்த வாகனங்களில் கண்டறியப்பட்ட குறைபாடுகளை சரி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நேற்று நடைபெற்ற வாகன தணிக்கைக்கு கொண்டுவரப்படாத 39 வாகனங்களை இந்த மாதம் (மே) இறுதிக்குள் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரில் கொண்டு வந்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் கல்வி நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.