தற்காலிக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம்
மயிலாடுதுறையில், அனைத்து பிரிவுகளுடன் தற்காலிக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி திறந்து வைத்தார்.
மயிலாடுதுறையில், அனைத்து பிரிவுகளுடன் தற்காலிக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி திறந்து வைத்தார்.
திறப்பு விழா
மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரத்தில் தற்காலிக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் லலிதா தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா முன்னிலை வகித்தார். இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார்.ஏற்கனவே திருவாரூர் சாலையில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் செயல்பட்டு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமானது இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் தற்காலிக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கொண்டு வரப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
அனைத்து பிரிவுகளுடன் செயல்படுகிறது
இந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குற்ற ஆவண காப்பகம், சைபர் கிரைம், தனிப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு அலுவலகங்களும் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.இதுவரை ஒரு சில போலீஸ் பிரிவுகள் கொண்டு வரப்படாமல் நாகையிலேயே இருந்துவந்த சூழ்நிலையில் மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அனைத்து பிரிவுகளும் கொண்டுவரப்பட்டு நேற்று முதல் முழுமையான அலுவலகமாக செயல்பட தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுதப்படை அலுவலகம்
விழாவில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா கூறுகையில், மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் துறையில் அனைத்து பிரிவுகளும் கொண்டுவரப்பட்டுள்ளது. விரைவில் ஆயுதப்படை அலுவலகமும் தனியாக திறக்கப்பட உள்ளது. புதிதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டுவதற்கான பணி விரைவில் தொடங்கும். மயிலாடுதுறை நகரில் கூடுதலாக ஒரு போலீஸ் நிலையம் கொண்டு வர அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார்.இதில் உதவி கலெக்டர் யுரேகா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், நகர சபை தலைவர் செல்வராஜ் மற்றும் அனைத்து பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், அனைத்து இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.