ஒதியத்தூர் ஊராட்சியை பிரித்து புதிய ஊராட்சி அமைக்க வேண்டும்

ஒதியத்தூர் ஊராட்சியை பிரித்து புதிய ஊராட்சி அமைக்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.

Update: 2023-03-13 17:52 GMT

மக்கள் குறைதீர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினர்.

பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

வார்டு உறுப்பினர் பதவி

பேரணாம்பட்டு அருகே உள்ள ராஜாக்கல் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி பி.ஜெயந்தி என்பவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் ராஜாக்கல் ஊராட்சி மன்ற தேர்தலில் 7-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டேன். அதே வார்டில் வி.ஜெயந்தி என்பவரும் போட்டியிட்டார். அப்போது நான் தோல்வியடைந்ததாகவும் வி.ஜெயந்தி வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் எனது வாக்கு குறித்து விவரம் சேகரித்தேன். அதில் பி.ஜெயந்தி ஆகிய நான் 119 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகவும், தற்போது பதவியில் உள்ள வி.ஜெயந்தி 64 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்ததாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெற்றி பெற்ற என்னை தோல்வி அடைந்ததாக கூறி ஏமாற்றி உள்ளனர். உண்மையான வெற்றி பெற்ற எனக்கு வார்டு உறுப்பினர் பதவி அளிக்க வேண்டும். முரண்பாடுகளை களைந்து குழப்பத்தையும் தீர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய ஊராட்சி உருவாக்க வேண்டும்

அணைக்கட்டு அருகே உள்ள ஒதியத்தூர் ஊராட்சியை சேர்ந்த 4 கிராமத்தை சேர்ந்த மக்கள் அளித்துள்ள மனுவில் ஒதியத்தூர் ஊராட்சியில் 6,7,8,9 ஆகிய வார்டுகளில் உள்ள ராஜாபுரம், தாங்கல், தாங்கல் புதுமனை, மலைகன்னிகாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். நாங்கள் பல கிலோ மீட்டர் தூரம் சென்று வாக்களிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் எங்களால் வாக்களிக்க போக முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதனால் முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அவதிப்படுகின்றனர். அரசின் சலுகைகளை பெற முடியாத நிலை உள்ளது. பஸ் வசதியும் கிடையாது. எனவே ஒதியத்தூர் ஊராட்சியிலிருந்து எங்கள் கிராமங்களை பிரித்து புதிய ஊராட்சி உருவாக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

நூதன முறையில்...

குடியாத்தம் தாலுகா விழுதோணப்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு மேலாடை இன்றி அரை நிர்வாணத்துடன் நூதன முறையில் மனு அளிக்க வந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்தில் உள்ள சுமார் 85 புளியமரங்களை மகசூல் பட்டா மூலம் அனுபவித்து வருகிறோம். அதற்கான தீர்வை ஆண்டுதோறும் அளித்து வருகிறோம். ஆனால் அதற்கான ரசீது கொடுப்பதில்லை. இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் முன் அறிவிப்பு இன்றி மரங்களை ஏலம் விட்டுள்ளனர். அந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டும். இந்த மனு மீது எந்த வித நடவடிக்கையும் இல்லாவிட்டால் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையை அரசுக்கு ஒப்படைப்போம் என்றனர்.

சாலை அமைக்க வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் வேலூர் ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. பள்ளம் தோண்டப்பட்ட இடத்தில் சாலை அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் ஒருவர் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டார். எனவே ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்