அரசு வழங்கிய இலவச வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பு

திண்டுக்கல் அருகே சலவை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2023-07-24 19:45 GMT

குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், கலெக்டர் பூங்கொடி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சேக்முகையதீன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குனர் சரவணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அடிப்படை வசதிகள், உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 197 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். மேலும் 5 பேருக்கு சிறுதொழில் உதவித்தொகையாக ரூ.70 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார்.

சலவை தொழிலாளர்கள்

இதில் சலவை தொழிலாளர்கள் கொடுத்த மனுவில், திண்டுக்கல் அருகே அடியனூத்து ஊராட்சியில் கண்ணாபட்டி பிரிவு பகுதியில், கடந்த 1999-ம் ஆண்டு 50 சலவை தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை வழங்கப்பட்டது. அதில் 10 பேர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். வீடு கட்ட வசதி இல்லாதவர்கள் குடிசை அமைத்தோம். பின்னர் அதை சீரமைக்க முடியாமல் சிரமப்பட்டோம். அதை பயன்படுத்தி எங்களுடைய வீட்டுமனைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டன. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி நாங்கள் வீடு கட்டி வசிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே பழனி அருந்ததியர் மடம் மீட்புக்குழு மற்றும் வேடசந்தூர் பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பழனியில் எங்களுக்கு ஒரு மடம் வழங்கப்பட்டது. தற்போது அந்த மடம் ஆக்கிரமிப்பில் இருக்கிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி மடத்தை மீட்டு தரவேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்