ஈரோட்டில் 80 அடி சாலை அமைக்க தடையாகதனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் நிலம் அளவீடு
நிலம் அளவீடு
ஈரோடு மாநகரில் 80 அடி சாலை அமைக்க தடையாக தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தை மீட்க வேண்டும் என்று பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரணை நடத்தி, தனியார் வசம் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு இடம் என்றும், 80 அடி சாலையை செயல்படுத்திட தடையில்லை என உத்தரவிட்டது.
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவுப்படி தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள 12.66 ஏக்கர் நிலத்தை நேற்று போலீஸ் பாதுகாப்புடன் வருவாய் துறையினர் முன்னிலையில் அளவீடு செய்யும் பணி நடந்தது. நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் பிரதீப், மாநகர டவுன் தலைமை சர்வேயர் கவுரி சங்கர் ஆகியோர் நவீன டிஜிட்டல் கருவி (டி.ஜி.பி.எஸ்) மூலம் நிலத்தை அளவீடு செய்தனர். இதையொட்டி ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.