சர்வதேச தேயிலை தினம் கடைபிடிப்பு
கட்டபெட்டு கூட்டுறவு தொழிற்சாலையில் சர்வதேச தேயிலை தினம் கொண்டாடப்பட்டது.
கோத்தகிரி
ஆண்டுதோறும் மே மாதம் 21-ந் தேதி சர்வதேச தேயிலை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோத்தகிரி அருகே கட்டபெட்டு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையில் சர்வதேச தேயிலை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு இன்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் மோனிகா ராணா முன்னிலை வசித்தார். தேயிலை வாரிய செயல் இயக்குனர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசும்போது, தேயிலை வாரியம் மேற்கொள்ளும் பணிகள், விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியம், கடன், தேயிலை வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார். இன்ட்கோசர்வ் தலைமை செயல் அலுவலர் மோனிகா ராணா பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் 16 இன்ட்கோசர்வ் கூட்டுறவு தொழிற்சாலைகள் மூலம் 25 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். அவர்கள் நலனுக்காக இன்ட்கோசர்வ் நிறுவனம் பாடுபட்டு வருகிறது என்றார்.
மேலும் சிறு விவசாயிகள் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். பின்னர் தேயிலை விவசாயிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தரமான பச்சை தேயிலையை பிரித்தெடுக்கும் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சர்வதேச தேயிலை தினத்தையொட்டி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தேநீர் கோப்பைகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விழாவில் இன்ட்கோசர்வ் தலைவர், மாவட்ட சுற்றுலா அலுவலர், இன்ட்கோசர்வ் மற்றும் தேயிலை வாரிய அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கட்டபெட்டு இன்ட்கோ மேலாண்மை இயக்குனர் அருள்செல்வம் நன்றி கூறினார்.