தீ தொண்டு நாள் கடைபிடிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தீ தொண்டு நாளையொட்டி பணியின்போது பலியான தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-04-14 18:45 GMT

தீ தொண்டு நாள்

மும்பை துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி கப்பலில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். அதன் நினைவாகவும், பணியின்போது பலியான தீயணைப்புத்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ந் தேதியை தீ தொண்டு நாளாக தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாமக்கல் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர் தவமணி, நாமக்கல் நிலைய அலுவலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மவுன அஞ்சலி

இதில் மும்பை கப்பல் தீ விபத்தில் பலியான 66 தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் அதைத்தொடர்ந்து தற்போது வரை பணியின்போது வீர மரணம் அடைந்த தீயணைப்புத்துறையினரை போற்றும் விதத்தில் தீயணைப்புத்துறை வீரர்கள் அணியும் பாதுகாப்பு உடை மற்றும் உபகரணங்களை கொண்டு அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்திற்கு மாவட்ட அலுவலர் செந்தில்குமார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் உதவி மாவட்ட அலுவலர் தவமணி, நாமக்கல் நிலைய அலுவலர் சிவக்குமார் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து பணியின்போது பலியான தீயணைப்புத்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்செங்கோடு

திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் பணியின்போது பலியான தீயணைப்புத்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையடுத்து தீயணைப்புத் துறையின் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், சேலம் ரோடு, வாலரை கேட் ஆகிய பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்