ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம்:ீடியோ ஆதாரங்களை பார்த்து நீதிபதி அதிருப்தி- பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய அதிரடி உத்தரவு
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இடம்பெற்றது குறித்து அதுசம்பந்தமான வீடியோ ஆதாரங்களை பார்த்ததும் நீதிபதி அதிருப்தி அடைந்தார். பின்னர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்..
ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம் இடம்பெற்றது குறித்து அதுசம்பந்தமான வீடியோ ஆதாரங்களை பார்த்ததும் நீதிபதி அதிருப்தி அடைந்தார். பின்னர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்..
ஆடல்-பாடலில் ஆபாசம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை அடுத்த அரசகுளத்தைச் சேர்ந்த கதிரேசன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
எங்கள் கிராமத்தில் கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தனிநபர் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது. ஆனால் இந்த கோவிலை சிலர் தங்களுக்கு சொந்தமானது என்பது போல நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த பங்குனி உற்சவ விழாவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடத்த ஐகோர்ட்டில் அனுமதி பெற்றனர். ஆடல்-பாடல் நிகழ்ச்சியின்போது ஆபாச நடனங்கள் இருக்கக்கூடாது என ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது. ஆனால் கோர்ட்டு விதித்த நிபந்தனைக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி நடந்த ஆடல்-பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனம், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றன..
இதனால் நிகழ்ச்சியை காண வந்திருந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் அசவுகரியத்துக்கு ஆளானார்கள். வேறு எந்த திருவிழாவிலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது வழக்குபதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதி அதிருப்தி
இந்த வழக்கு ஏற்கனவே ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து அதுதொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கணபதி சுப்பிரமணியன் ஆஜராகி, ஆபாச நடனம் குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். அவற்றை பார்த்த நீதிபதி கடும் அதிருப்தி அடைந்தார்.
பின்னர், கோர்ட்டு நிபந்தனையை மீறி கோவில் திருவிழாவில் ஆபாச நடனத்தை போலீசார் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பினார்.
வன்கொடுமை சட்டத்தில் வழக்கு
மேலும், இதுதொடர்பாக சாதாரண பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்ததை ஏற்க முடியாது. எனவே பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்து, அதுதொடர்பாக அறிக்கைைய தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.