கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு: விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் வாபஸ் - அமைச்சர் முத்துசாமி பேச்சுவார்த்தையில் சமரசம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் அமைச்சர் சு.முத்துசாமி பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
பெருந்துறை
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடந்த விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டம் அமைச்சர் சு.முத்துசாமி பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டது.
7-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறை அருகே உள்ள வாய்க்கால் மேடு பகுதியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து 7-வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
விவசாயிகளின் உண்ணாவிரத போராட்டத்துக்கு கொ.ம.தே.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்து இருந்தன.
பேச்சுவார்த்தை
இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை நேற்று அமைச்சர் சு.முத்துசாமி நேரில் சந்தித்தார். இதைத்தொடர்ந்து அவர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், 'பழைய ஆயக்கட்டு பகுதியில் நடந்து வரும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என்றும், புதிதாக எந்த சீரமைப்பு பணியையும் மேற்கொள்வது இல்லை என்றும், வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விட வேண்டி உள்ளதால், விவசாயிகள் அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் போராட்டத்தை கைவிட வேண்டும்,' என்றும் கேட்டுக்கொண்டார்.
வாபஸ்
அமைச்சர் சு.முத்துசாமியின் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு சமரசம் அடைந்த விவசாயிகள், தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கு அமைச்சர் சு.முத்துசாமி பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
அப்போது கணேசமூர்த்தி எம்.பி., தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, கொ.ம.தே.க. மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு, பா.ஜனதா விவசாய பிரிவு மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்பட விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.