காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கட்டிடம் கட்ட எதிர்ப்பு

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கட்டிடம் கட்டுவதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வேறு இடத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-04-19 18:45 GMT

கூடலூர்,

கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை சிற்றுண்டி திட்டத்துக்கு கட்டிடம் கட்டுவதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். வேறு இடத்தை தேர்வு செய்ய பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இடம் தேர்வு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காலையில் பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய அவசரத்தில் போதிய உணவு எடுத்துக் கொள்வதில்லை. இதனால் அரசு பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.இந்தநிலையில் கூடலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக காலை சிற்றுண்டி தயார் செய்ய கட்டிடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். பின்னர் கூடலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடங்களுக்கு அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது.

கட்டிடம் கட்ட எதிர்ப்பு

தொடர்ந்து சிற்றுண்டி மைய கட்டிடம் கட்டப்பட்டு, தினமும் காலையில் வாகனம் மூலம் கூடலூர் நகராட்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு போதிய இடவசதி இல்லாத நிலையில், காலை சிற்றுண்டி தயார் செய்ய கட்டிடம் கட்டுவதற்கு மாணவர்கள், பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் போதிய இடவசதி உள்ள வேறு பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி தயாரிப்பு மைய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நகராட்சி பகுதியில் உள்ள 12 பள்ளிக்கூடங்களுக்கு காலை சிற்றுண்டி தயார் செய்து கொண்டு செல்வதற்காக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் கட்டிடம் கட்ட அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இந்த முடிவை கைவிட வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்