ஓ.பன்னீர்செல்வத்தின் படம், பெயரை அழித்து மாணவர் அணியினர் கோஷமிட்டதால் பரபரப்பு

விழுப்புரத்தில் அ.தி.மு.க. கட்சி அலுவலகம், சுவர் விளம்பரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் படம், பெயரை அழித்து மாணவர் அணியினர் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-06-24 14:03 GMT

விழுப்புரம்:

அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை என்ற கோரிக்கையை இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுவர் விளம்பரத்தில்கூட ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரோ, புகைப்படமோ இருக்கக்கூடாது என்று எண்ணி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அதனை அழித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்தின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், ஏற்கனவே வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படத்தை அ.தி.மு.க.வினர் அழித்து வருகின்றனர்.

கோஷம்

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் மாவட்ட மாணவர் அணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மற்றும் பெயரை  மாவட்ட மாணவர் அணி செயலாளர் சக்திவேல் தலைமையில் மாணவர் அணியினர் அழித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அப்போது வேண்டும்... வேண்டும்... எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒற்றைத்தலைமை வேண்டும் என வலியுறுத்தியும், ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் கட்சி அலுவலகம் அருகில் விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் மற்றும் அவரது புகைப்படம் வெள்ளையடித்து அழிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது நகர செயலாளர் வண்டிமேடு ராமதாஸ், துணை செயலாளர் வக்கீல் செந்தில், நகர அவைத்தலைவர் பால்ராஜ், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் ராஜ்குமார், நகர மாணவர் அணி நிர்வாகிகள் தீனா, குட்டி, குணா, ராஜா, தேவா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்