ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் அ.ம.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் அ.ம.மு.க. நிர்வாகிகள் சந்தித்தனர்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில வாரங்களுக்கு முன் சந்தித்தார். அப்போது, தொண்டர்களின் விருப்பப்படி அ.தி.மு.க.வை மீட்டு தி.மு.க.வை வீழ்த்த இணைந்து செயல்படுவோம் என்று அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.
இந்தநிலையில் திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அலுவலகத்துக்கு அ.ம.மு.க. மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன் (மாநகர்), ராஜசேகரன் (புறநகர் வடக்கு), கலைச்செல்வன் (புறநகர் தெற்கு) மற்றும் அ.ம.மு.க.வினர் நேற்று முன்தினம் சென்றனர். அங்கு அவர்களை ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி நடராஜன் (மாநகர்), முசிறி ரத்தினவேல் (புறநகர் வடக்கு), ராஜ்மோகன் (தெற்கு), சாமிக்கண்ணு (மேற்கு) ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அரசியல் பயணத்தில் தலைமை முடிவின்படி இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர். நிகழ்ச்சியில் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை அ.ம.மு.க. நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.