ஓ.பன்னீர்செல்வம் நாளை ராஜபாளையம் வருகை

ஓ.பன்னீர்செல்வம் நாளை ராஜபாளையம் வருகிறார்.

Update: 2022-08-29 20:58 GMT

சிவகாசி,

தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் மன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நாளை (புதன்கிழமை) ராஜபாளையம் வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வரவேற்பு அளிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகாசி அ.தி.மு.க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:- மாமன்னர் பூலித்தேவன் பிறந்த நாள் விழா 1-ந் தேதி தென்காசி மாவட்டத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் ராஜபாளையம் வருகிறார். அங்கு அவர் தங்குகிறார். அவருக்கு விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இந்த மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள். அ.தி.மு.க.வில் உள்ள 1½ கோடி தொண்டர்களும் ஓ.பன்னீர்செல்வம் பின்னால் தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க ஒன்று இணைய வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்கள் மனதில் எழுந்துள்ளது. தனித்து நிற்பவர்கள் அதற்கான பலனை அடைவார்கள். கட்சியும், சின்னமும், கொடியும் ஓ.பன்னீர்செல்வத்திடம் தான் இருக்கிறது. எனவே அதை கைப்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் எல்லா பதவிகளும் பார்த்துவிட்டார். அவருக்கு பதவி ஆசை இருக்க முடியுமா? கட்சி ஒருங்கிணைய வேண்டுமென்ற எண்ணம் உள்ளவர்கள் அனைவரும் ஓ.பன்னீர்செல்வம் ஆசைப்படி நடப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளர் தெய்வம், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், ஆவின் கண்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.



மேலும் செய்திகள்