மத்திய மந்திரி அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்...!

சென்னை வந்துள்ள மத்திய மந்திரி அமித்ஷாவை இன்று பிற்பகல் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்கிறார்.

Update: 2022-11-12 02:57 GMT

சென்னை,

சென்னையில் நடைபெறும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நேற்று தமிழகம் வந்தார். இதற்காக டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்த அவர், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் ஓய்வெடுப்பதற்காக தங்கினார்.

இதனை தொடர்ந்து இன்று காலை 11.05 மணிக்கு ராஜ்பவனில் இருந்து கார் மூலம் புறப்பட்டு வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு 11.25 மணிக்கு வருகிறார். அங்கு காலை 11.30 மணி முதல் பிற்பகல் 12.50 வரை நடக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் 75-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசுகிறார்.

பின்னர் அங்கிருந்து பிற்பகல் 2.05 மணிக்கு அவர் புறப்பட்டு தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு 2.20 மணிக்கு வருகிறார். பிற்பகல் 3.25 மணிவரை அங்கிருந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதனிடையே மத்திய மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேச ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் இருந்து நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, இன்று பிற்பகல் ஓ.பன்னீர் செல்வம், மத்திய மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ஒன்றுபட்ட அதிமுக குறித்து ஓ.பி.எஸ் பேச உள்ளதாகவும் கூறுப்படுகின்றது.

Tags:    

மேலும் செய்திகள்