ஈரோட்டை சேர்ந்தஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாவட்ட செயலாளர் உள்பட நிர்வாகிகள் நேற்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Update: 2023-02-22 20:34 GMT

சேலம்,

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்


அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணியின் ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக டி.முருகானந்தம் செயல்பட்டார். இந்த அணியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டார்.

அவர் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு, இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சா் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும், வேட்பாளர் செந்தில்முருகனின் வேட்பு மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாவட்ட செயலாளர் டி.முருகானந்தம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்து, அதற்கான கடிதங்களை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்தனர்.

அ.தி.மு.க.வில் இணைந்தனர்

இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களாக இருந்த டி.முருகானந்தம் தலைமையில் மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் சிவமுருகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் எஸ்.ராஜமாணிக்கம், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் நேற்று சேலம் வந்தனர்.

பின்னர் அவர்கள் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்து அவரை சந்தித்து அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர். அப்போது, அவர்களை எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதுகுறித்து டி.முருகானந்தம் கூறும்போது, 'ஓ.பன்னீர்செல்வம்அணியின் மாவட்ட செயலாளரான எனக்கு வேட்பாளர் யார்? என்றே தெரியாது. கட்சிக்கு தொடர்பு இல்லாதவரை வேட்பாளராக அறிவித்தனர். இது எனக்கு மட்டுமின்றி என்னை சார்ந்திருந்த கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எனது தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவருக்கு ஆதரவை தெரிவித்தோம். மீண்டும் தாய் கட்சியான அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக்கொண்டேன்' என்றார்.


புதிய நிர்வாகிகள் நியமனம்


இதற்கிடையே புதிய நிர்வாகிகளை ஓ.பன்னீர்செல்வம் நியமித்தார். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளராக எஸ்.என்.தங்கராஜ், ஈரோடு மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக டி.முருகானந்தம், இணைச் செயலாளராக எஸ்.பாஸ்கரன், ஜெயலலிதா பேரவை செயலாளராக பி.ஜெயபிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





Tags:    

மேலும் செய்திகள்