ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக மவுன யுத்தம் தொடங்கினார்- ஆர்.பி.உதயகுமார்
‘ஓ.பன்னீர்செல்வம் பதவிக்காக மவுன யுத்தம் தொடங்கினார்’ என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
பொன்விழா
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் அ.தி.மு.க. 50-வது ஆண்டு பொன்விழா, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. பிறந்தநாள் விழா அங்குள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு சான்றிதழ், விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.
பேட்டி
பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 7 முறை தனது நிலைப்பாட்டினை ஓ.பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் பதவி ஏற்றார். அதன்பிறகு ராஜினாமா செய்தார். பின்னர் தர்மயுத்தம் தொடங்கினார். தி.மு.க. வுடன் இணைந்து சட்டமன்றத்தில் அ.தி.மு.க.விற்கு எதிராக வாக்களித்தார்.
மவுனயுத்தம்
எதிர்க்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வந்தபோது வழக்கம்போல ஓ.பன்னீர்செல்வம் மவுன யுத்தத்தினை தொடங்கினார். எப்போதெல்லாம் தனக்கு பதவி கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் மவுன யுத்தத்தினை தொடங்குவார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்வார். ஓ.பன்னீர்செல்வம் மவுனமாக தொடங்கும் யுத்தம், தர்மயுத்தம் அல்ல. அது துரோக யுத்தம்.
எப்போதெல்லாம் தன் பதவிக்கு ஆபத்து வருகிறதோ, அப்போதெல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தினை ஓ.பன்னீர்செல்வம் உருவாக்குவார். அவருடைய யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது.
இ்வ்வாறு அவர் கூறினார்.