ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டார்.

Update: 2022-09-18 18:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். மேலும் அவர் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டார்.

ஓ.பன்னீர்செல்வம்

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது 2-வது மகன் ஜெயபிரதீப் மற்றும் குடும்பத்தினருடன் ராமேசுவரம் வந்தார்.

அவர் நேற்று காலை அக்னிதீர்த்த கடலில் புனித நீராடிய பின்னர் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் குடும்பத்தினருடன் நீராடினார். தொடர்ந்து கோவில் போலீஸ் நிலையம் அருகே உள்ள மடம் ஒன்றில் வைத்து நடைபெற்ற பூஜையிலும் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அங்கு நடைபெற்ற பூஜையில் தன் மனைவியின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திதி மற்றும் தர்ப்பணம் செய்தார்.

ருத்ராபிஷேக பூஜை

மேலும் அங்கு நடந்த திலஹோமம் பூஜையிலும் கலந்து கொண்டார். பூஜை முடிந்த பின்னர் மாலை 4 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்தார். அவர் விஸ்வநாதர் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் அமர்ந்து ருத்ராபிஷேக பூஜை மற்றும் 108 சங்காபிஷேக பூஜையிலும் கலந்து கொண்டார். புனித நீர் வைக்கப்பட்டிருந்த கலசத்தை அவரும், அவரது மகனும் கையில் வைத்தபடி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

தொடர்ந்து கருவறையில் உள்ள சாமிக்கு புனித தீர்த்தத்தால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. அப்போது தர்மர் எம்.பி., அ.தி.மு.க. நகர் பொருளாளர் தர்மர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். அ.தி.மு.க.வில் தற்போது இரு பிரிவாகி பல்வேறு பிரச்சினைகள் நடைபெற்று வரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் ராமேசுவரத்தில் திலஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாக பூஜை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்