தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்துகிறார் - முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள ஆதரவை பார்த்து தான் அதிமுக தலைமை கழக சாவியை நீதிமன்றமே ஒப்படைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
கோவில்பட்டி,
கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜூ தலைமை வகித்தார். அதனை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது,
திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப் போறார் என்று கூறினார்கள். ஆனால் தமிழகம் இருளில் உள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு மட்டுமல்ல மின்வெட்டும் அதிகமாக உள்ளது. சம்சாரம் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. மின் கட்டண உயர்வினால் பொதுமக்கள் மற்றும் தொழிற்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சி போனால் அதற்கு முழு காரணம் நான் தான் என்று முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியது போல், சொல்லக்கூடிய சூழ்நிலை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் வரும். எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள ஆதரவை பார்த்து தான் அதிமுக தலைமை கழக சாவியை நீதிமன்றமே ஒப்படைத்துள்ளது. வங்கிகளும் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு உள்ளது என்றும், அதிமுக உள்விவகாரங்களில் நாங்கள் தலையிட மாட்டோம் என்று பாஜக தெளிவாக கூறிவிட்டது.
பிரதமர் மோடி கூறி தான் அதிமுகவில் இணைந்ததாக ஓ. பன்னீர்செல்வம் கூறினார் தவிர பிரதமர் மோடி இதுவரை கூறவில்லை. தற்காப்புக்காக பிரதமர் மோடி பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரதமர் மோடி, பாஜக தலைவர்கள் தற்போது வரை அதிமுக உட்கட்சி பிரச்சனை குறித்து பேசியதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.