ஓ.பன்னீர்செல்வம் உட்பட எங்களை நீக்கிய தீர்மானமும் செல்லாது - வைத்திலிங்கம் பேட்டி
ஓ.பன்னீர்செல்வம் உட்பட எங்களை நீக்கிய தீர்மானமும் செல்லாது என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறினார்.
சென்னை,
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓ.பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நேரத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்கள், கட்டைகளால் கடுமையாக தாக்கினர். இந்த மோதலின் போது 58 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அதிமுக அலுவலகம் போர்க்களமானது.
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது குறித்து ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அதிமுக கட்சி நிர்வாகம் மற்றும் சின்னத்தை எங்களுக்கு வழங்க தலைமை தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம். நேற்று நடந்த விதிமீறல் பொதுக்குழு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். சட்ட நடவடிக்கைகள தொடரும்.
இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி, பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமித்தது செல்லாது. ஓ.பன்னீர்செல்வம் உட்பட எங்களை நீக்கிய தீர்மானமும் செல்லாது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தான்.
அடிப்படை தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். அம்மாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் செய்தார் என்று கூறுவது ஏற்கக்கூடியதாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.