கரூர், சேலம் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை
பெரியகுளம் அருகே பண்ணை வீட்டில் கரூர், சேலம் நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இங்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் கைலாசபட்டி பண்ணை வீட்டுக்கு கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் 200 பேர் வந்தனர். அவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பின்னர் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நிர்வாகிகள் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அ.தி.மு.க. அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.