டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர் செல்வம் திடீர் சந்திப்பு - அரசியலில் பரபரப்பு நிகழ்வு...!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்தார்.
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார். சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டிற்கு நேரில் சென்ற ஓ.பன்னீர் செல்வம் அவரை சந்தித்தார். இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் திருச்சியில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் வகையில் மாநாடு ஒன்றை கூட்டினார். இந்த மாநாட்டை தொடர்ந்து தற்போது டிடிவி தினகரனை ஓ.பன்னீர் செல்வம் இன்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது ஓ.பன்னீர் செல்வம் உடன் பன்ருட்டி ராமச்சந்திரனும் உடன் இருந்தார். கடந்த மாதம் திருச்சி மாநாட்டில் சசிகலாவை 'சின்னம்மா' என ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார். சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட தயார் எனவும் ஓபிஎஸ் கூறியிருந்த நிலையில் தற்போது அவர் டிடிவி தினகரனை சந்தித்துள்ள நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்த சந்திப்பு ஓ.பன்னீர் செல்வமும், டிடிவி தினகரனும், சசிகலாவும் இணைந்து செயல்பட வாய்ப்புகளை அதிகரிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.