விடுதி மாணவிகளுக்கு சத்தான உணவு வழங்க வேண்டும்

கல்லூரி விடுதி மாணவிகளுக்கு சத்தான உணவு வகைகளை வழங்க கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.

Update: 2023-08-03 19:01 GMT

கலெக்டர் ஆய்வு

ராணிப்பேட்டையில் உள்ள சிறுபான்மையினர் நல மாணவிகள் தங்கும் விடுதி மற்றும் வாலாஜாபேட்டை அறிஞர் அண்ணா அரசினர் கலை கல்லூரி வளாகத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவிகள் தங்கும் விடுதிகளில் கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவிகள் தங்கும் அறைகள், கழிவறை, குடிநீர் வசதி, சமையலறை ஆகியவற்றை பார்வையிட்டு, இதர அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாணவிகளிடம் நிறை குறைகளை கேட்டு அறிந்த பின்னர், மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். படிக்கும் காலத்தில் மாணவிகள், கணினி, தட்டச்சு போன்ற கூடுதல் அறிவை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், மாணவிகளுக்கு தேவையெனில் தட்டச்சு எந்திரங்களை விடுதிகளில் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

சத்தான உணவு

பின்னர் விடுதி காப்பாளர்களிடம் பேசிய கலெக்டர், மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் சத்து மிக்க உணவாக காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை கொடுக்குமாறு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, தாசில்தார் வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்