சத்துணவு அமைப்பாளர் தூக்குப் போட்டு தற்கொலை

கழுகுமலை அருகே சத்துணவு அமைப்பாளர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-12 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே சத்துணவு அமைப்பாளர் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்துணவு அமைப்பாளர்

கழுகுமலை அருகே வேலாயுதபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 56). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி தனலட்சுமி (50). இவர்களுக்கு உமா, பிரியதர்ஷினி ஆகிய 2 மகள்களும், வேணுகோபால் என்ற மகனும் உள்ளனர்.

தனலட்சுமி, கல்லூரணி கிராமத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்த நிலையில் இரவு 7 மணியளவில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்தில் வீட்டிற்கு நரசிம்மன் வந்தபோது கதவு பூட்டியிருந்துள்ளது.

தூக்கு போட்டு தற்கொலை

நீண்டநேரமாக அவர் கதவை தட்டியும் திறக்காததால் அதிர்ச்சி அடைந்து அவரது மகன் வேணுகோபாலுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளார். உடனடியாக அவரும் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டிற்குள் தனலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த கழுகுமலை போலீசார் சம்பவ வீட்டிற்கு வந்து, தனலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

இதுகுறித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி இறந்ததற்கு வேலை பார்க்கும் இடத்தில் பணிச்சுமை காரணமா? அல்லது வேறு ஏதும் பிரச்சினையா? என்ற அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்