சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்
காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர் சங்கம்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை மடிேயந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜயா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சம்பத், மாநிலத் துணைத்தலைவர் அண்ணாதுரை ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
இதில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மையங்கள் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்த வேண்டும். 40 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணியில் இருந்து ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக் கொடையாக வழங்க வேண்டும். கியாஸ் சிலிண்டர்களை அரசே வழங்க வேண்டும்.
காலிப்பணியிடம்
காலிப்பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்பிட வேண்டும் என்பன உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மீனாட்சி நன்றி கூறினார்.