3-வது மாடியில் இருந்து குதித்து நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி

ஒட்டன்சத்திரம் அருகே, 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

Update: 2023-02-21 19:00 GMT

மாணவி தற்கொலை முயற்சி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையறும்பு ஊராட்சிக்குட்பட்ட பழையபட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன். அவருடைய மகள் கார்த்திகா ஜோதி (வயது 19). இவர், ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், விடுதியில் தங்கி பி.எஸ்.சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை 9 மணி அளவில் கார்த்திகா ஜோதி, விடுதியின் 3-வது மாடிக்கு சென்றார். பின்னர் யாரும் எதிர்பாராத நேரத்தில், அவர் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த விடுதி காப்பாளர் மற்றும் கல்லூரி ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக, ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் போலீசார் சம்பவம் நடந்த கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் மாணவி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் மாஜிஸ்திரேட்டு செல்வி மகேஸ்வரி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

இதேபோல் கல்லூரி முதல்வர் தேன்மொழி, விடுதி காப்பாளர் கவுசல்யா, மாணவியின் பெற்றோர் மற்றும் சக மாணவிகளிடம் கார்த்திகா ஜோதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

3-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்