தூத்துக்குடியில் நர்சிங் கல்லூரி மாணவி சாவு:வாலிபர் அதிரடி கைது
தூத்துக்குடியில் நர்சிங் மாணவி விஷம் குடித்து இறந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் நர்சிங் மாணவி விஷம் குடித்து இறந்த சம்பவம் தொடர்பாக வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நர்சிங் மாணவி
தூத்துக்குடி லேபர் காலனியை சேர்ந்தவர் சரவணகுமார். கட்டிட தொழிலாளி. இவரது மகள் ஹரினி (வயது 20). இவர் தூத்துக்குடி அரசு நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் வைத்து விஷம் குடித்து விட்டாராம். உடனடியாக, அவரது பெற்றோர் ஹரினியை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
மறுப்பு
இது குறித்து தெர்மல்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர், அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியுடன் விருதுநகரை சேர்ந்த ராபின் என்ற வாலிபருக்கு பழக்கம் இருந்ததாகவும், அவர் தான் ஹரினியின் சாவுக்கு காரணம் என்றும் புகார் தெரிவித்தனர். அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
வாலிபர் கைது
நேற்று 2-வது நாளாக இறந்த மாணவியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தெர்மல்நகர் போலீசார், தற்கொலைக்கு தூண்டியதாகவும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் ராபின் மீது வழக்கு பதிவு செய்து, அவரை நேற்று கைது செய்தனர். இதனை தொடர்ந்து ஹரினியின் உறவினர்கள், அவரது உடலை பெற்று தகனம் செய்தனர்.