விடுப்பு எடுத்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

விடுப்பு எடுத்து செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-07 18:45 GMT

2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு முறையீடு ஆர்ப்பாட்டத்தில் நேற்று மாலை ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார். பொருளாளர்கள் நளினி, எழிலரசி, துணைத் தலைவர் அறிவுக்கொடி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில தலைவர் மீனாட்சி கலந்து கொண்டு 2 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். திருச்சி மாவட்ட தலைவர் காயத்திரி தேவி, துணைத் தலைவர் விமலா தேவி, பெரம்பலூர் மாவட்ட இணை செயலாளர்கள் வீரம்மாள், மலர்கொடி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்திற்காக மதியத்துக்கு பிறகு விடுப்பு எடுத்து கலந்து கொண்ட கிராம, பகுதி, சமுதாய செவிலியர்கள் நகர நல்வாழ்வு நிலையங்களில் பகுதி சுகாதார செவிலியர் பணியிடங்களில் பட்டதாரி செவிலியர்களை நகர சுகாதார மேலாளராக தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் அரசாணை 288-ஐ தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் இடைநிலை சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ள அரசாணை 392-ஐ தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 2 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வமணி வரவேற்றார். முடிவில் மெர்சி கிளாரா நன்றி கூறினார். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்திலும், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்திலும் கோரிக்கை தொடர்பான மனுவினை அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்