குழந்தைகள் காப்பக உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது

நாகையில், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்பக உரிமையாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-15 18:45 GMT

நாகையில், 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்பக உரிமையாளரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குழந்தைகள் காப்பகம்

நாகை புதிய கடற்கரை செல்லும் சாலையில் ஒரு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தை பரமேஸ்வரன் என்பவர் நடத்தி வந்தார். இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி படித்து வந்தனர்.

இங்கு 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை தனி அறையில் வைத்து காப்பக உரிமையாளர் பரமேஸ்வரன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

காப்பகம் பூட்டு

இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி, போக்சோ சட்டத்தின் கீழ் பரமேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த அவரை தேடி வந்தனர்.

இந்தநிலையில் உதவி கலெக்டர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினர் காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காப்பகத்தில் இருந்த குழந்தைகளை அரசு இல்லத்திற்கு அழைத்துச்சென்று தங்க வைத்தனர். அதனை தொடர்ந்து குழந்தைகள் காப்பகத்தை பூட்டினர்.

கைது

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளரை கைது செய்யக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று நாகை அருகே பதுங்கி இருந்த பரமேஸ்வரனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்