கோவில்பட்டியில் பரபரப்பு: பாலியல் தொந்தரவால் நர்சு தற்கொலை முயற்சி தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது வழக்கு

கோவில்பட்டியில், பாலியல் தொந்தரவால் நர்சு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Update: 2022-05-31 12:55 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியில், பாலியல் தொந்தரவால் நர்சு தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

பாலியல் தொல்லை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் முரளி (வயது 58). டாக்டர். இவர் பழைய பஸ் நிலையம் அருகே ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார்.

இவருடைய ஆஸ்பத்திரியில் கோவில்பட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு நர்சாக பணிக்கு சேர்ந்தார். சம்பவத்தன்று அந்த நர்சு ஆஸ்பத்திரிக்கு வேலைக்கு சென்றார். பின்னர் ஆஸ்பத்திரியில் வார்டுகளுக்கு நோயாளிகளை பார்க்க சென்ற (ரவுண்ட்ஸ்) டாக்டர் முரளியுடன் அவரும் சென்றார். அப்போது அந்த நர்சுக்கு டாக்டர் முரளி, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

டாக்டர் மீது வழக்கு

இதனால் மனமுடைந்த அந்த நர்சு வீட்டிற்கு வந்ததும் தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். இதில் மயங்கி கிடந்த அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த நர்சு புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் விசாரணை நடத்தினார்கள். பின்னர் இதுதொடர்பாக டாக்டர் முரளி மீது போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர். மேல்விசாரணை நடந்து வருகிறது.

டாக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் நர்சு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்