சிறுமி இறந்த வழக்கில் நர்ஸ் கைது
சிறுமி இறந்த வழக்கில் நர்ஸ் கைது செய்யப்பட்டார்.
உப்பிலியபுரம்:
உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கொப்பம்பட்டி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமார். லாரி டிரைவர். இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் மகள் துர்காஸ்ரீ(வயது 4), வைரிசெட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்தாள். கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி துர்காஸ்ரீக்கு உடல்நிலை சரியில்லை என கொப்பம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு திரும்பிய நிலையில், மருத்துவமனையில் கொடுத்த மருந்து மாத்திரைகளை துர்காஸ்ரீக்கு சங்கீதா கொடுத்தார். சிறிது நேரத்திலேயே மூச்சுத்திணறி துர்காஸ்ரீ இறந்ததாக தெரிகிறது. இது பற்றி சங்கீதா அளித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கடந்த 8 மாத காலமாக தனது மகளின் இறப்பு பற்றி எந்த நடவடிக்கையும் இல்லை என்று முதல்-அமைச்சரின் தனிப்பிரிவிற்கு சங்கீதா புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து நேற்று உப்பிலியபுரம் போலீசார், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையின் நர்சான நாகநல்லூர் தெற்கு தெருவைச் சேர்ந்த சித்ரா(30) மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.