ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

Update: 2023-06-04 18:43 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். பொறியியல் கல்லூரியில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்றுத்தரும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் எண்ணும், எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியினை பாலையம்பட்டியில் உள்ள மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் வெள்ளைத்துரை பார்வையிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் கற்கும் அனைத்து வகையான கல்விக்கு அடிப்படையாகவும், ஆணிவேராகவும் அமைவது தொடக்கக் கல்வி ஆகும். இந்த தொடக்கக்கல்வியில் 2020-ல் கொரோனா பெருந்தொற்றினால் 19 மாத கால கற்றல் இடைவெளி ஏற்பட்டது.

கற்றல் இடைவெளி

கொரோனா கால கற்றல் இடைவெளியை குறைக்கும் பொருட்டு 2022-ம் ஆண்டில் 1 முதல் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் படி 2025-ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க நிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் புரிந்து வாசித்து, எழுதுதல் மற்றும் கணிதத்தில் அடிப்படைத்திறன்களை பெற்றிருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு தொடர்ந்து மகிழ்ச்சிகரமான கற்றல் அனுபவங்களை வழங்கிட எண்ணும், எழுத்தும் திட்டத்தை 2023-2024-ம் கல்வி ஆண்டில் இருந்த 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கும் விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

ஏற்பாடு

அதன் அடிப் படையில் தற்போது 4 மற்றும் 5-ம் வகுப்புகளை கையாழும் ஆசிரியர்களுக்கு முதல் பருவத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் உள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் நடராஜ் தலைமையில் மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டு பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுனர்கள் செய்திருந்தனர். முடிவில் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் பழ அழகப்பன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்