கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் பலூன்களை வானில் பறக்கவிட்டு, கையில் 200 ரூபாய் நோட்டை ஏந்தியபடி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், 2030-ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் மொத்த விவசாய பொருள் உற்பத்தி மதிப்பு ரூ.70 லட்சம் கோடியாக உயர்த்தப்படும் என்றும், ரூ.7 லட்சம் ஒவ்வொரு நபரும் ஆண்டு வருமானம் பெற வழிவகை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு கலைஞர் வேளாண் வளர்ச்சி சிறப்பு திட்ட நிதியாக ரூ.16.52 கோடி ஒதுக்கீடு செய்து ஓராண்டுக்கு 4.10 லட்சம் பட்டாதாரர்கள் தலா ரூ.200 மட்டுமே பெற்றுள்ளனர்.
அதிலும் 50 சதவீதம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்திய அரசு நிதி ரூ.6 ஆயிரம் வழங்குவது போல மாநில அரசானது ரூ.12 ஆயிரம் நிதி வழங்க வேண்டும் என்றனர்.
பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.