விற்பனைக்காக குவியும் நாவல் பழங்கள்; கிலோ ரூ.200-க்கு விற்பனை

தேனி மாவட்டத்தில் நாவல் பழங்கள் விற்பனைக்காக குவிந்து வருகின்றன. அவை கிலோ ரூ.200-க்கு விற்கப்படுகிறது.

Update: 2023-07-19 21:00 GMT

மருத்துவ குணம் கொண்டது, நாவல் பழம். இனிப்பு, புளிப்பு சுவையுடைய இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவது நல்லது என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். கல்லீரல் கோளாறுகள், குடல்புண் ஆகியவற்றுக்கும் நாவல் பழம் மருந்தாக உள்ளது. பொதுவாக நாவல் பழம் சீசன் மே மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை இருக்கும். தேனி மாவட்டத்தில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் இருந்து பறிக்கப்படும் நாவல் பழங்கள் தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. அதேபோல் வெளி மாநிலங்களில் இருந்தும் நாவல் பழங்கள் விற்பனைக்காக வருகின்றன.

தேனி மாவட்டத்தில் தற்போது நாவல் பழம் சீசன் தொடங்கியுள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் தள்ளுவண்டிகளிலும், வியாபாரிகள் கூடைகளில் வைத்தும் நாவல் பழங்களை விற்பனை செய்கின்றனர். கம்பத்தில் உழவர்சந்தை, பார்க் ரோடு, வேலப்பர்கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல் உள்ளிட்ட பகுதிகளிலும், முக்கிய சாலை சந்திப்புகளிலும் வியாபாரிகள் தள்ளுவண்டிகள் மூலம் நாவல் பழத்தை விற்பனை செய்து வருகின்றனர். பொதுமக்களும் நாவல் பழத்தை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். ஒரு கிலோ நாவல் பழம் ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து கம்பத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக நாவல் பழத்தின் மருத்துவ பயன் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் நகர்ப்புறங்களில் நாவல் பழங்களுக்கு மக்கள் முக்கியத்தும் கொடுத்து வாங்கி செல்கின்றனர். இதனால் அதன் தேவையும் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் நாவல் பழம் வரத்து குறைவு. இதனால் ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியில் இருந்து ஒட்டுரக நாவல் பழங்கள் தேனி மாவட்டத்துக்கு விற்பனைக்காக வந்து குவிகின்றன என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்