நவ. 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு
தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இன்னும் போதிய அளவு மழை பெய்யாத நிலையில் அவ்வப்போது பனியின் தாக்கமும் அதிக அளவில் காணப்படுகிறது. வழக்கமாக பனிப்பொழிவு தொடங்கி விட்டால் மழை குறைந்து விடும் என்பார்கள்.
ஆனால் தற்போது பருவம் தவறி மழை, பனிப்பொழிவு காணப்பட்டாலும் மழையும் அவ்வப்போது பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கியது. சென்னை உட்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.
குறிப்பாக சீர்காழியில் வரலாறு கானாத அளவில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.
பருவமழை தொடக்கத்தில் அதிக மழைப்பொழிவை தந்த நிலையில், தற்போது மழையின் அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், மழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும்போது,
தமிழகத்தில் நவ.17 முதல் 23ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடக்கத்தை விட குறைந்துள்ளது. குறிப்பாக 22 மாவட்டங்களில் இயல்பை விட வெகு குறைவாக மழை பதிவாகியுள்ளது. மேலும், 16 மாவட்டங்களில் போதிய அளவு பருவமழை பதிவாகவில்லை.
இனி வரும் நாட்களை பொறுத்தவரையில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை குறைவாக பதிவாக வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.