குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 வாகனங்களின் டிரைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 வாகனங்களின் டிரைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.

Update: 2023-08-04 19:56 GMT

குறைபாடுகள் கண்டறியப்பட்ட 8 வாகனங்களின் டிரைவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவிட்டார்.

வாகனங்கள் ஆய்வு

வேலூர் மாவட்ட காவல்துறை கட்டுப்பாட்டில் 127 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் மாதம் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. இதனை நேரடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்வார். அதன்படி வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நேற்று காவல்துறை வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில் 42 நான்கு சக்கர வாகனங்களும், 44 இருசக்கர வாகனங்களும் என மொத்தம் 86 வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. இந்த வாகனங்கள் தனித்தனியே வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆய்வு செய்தார். முதலில் இருசக்கர வாகனங்களை பார்வையிட்டார். அப்போது வாகனங்கள் முறையாக இயங்குகிறதா?, வலது மற்றும் இடது பக்க விளக்குகள் எரிகிறதா?, என்பதை ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் ஜீப்பினை ஆய்வு செய்தனர். வாகனங்கள் வாங்கிய வருடம், சர்வீஸ் விடப்பட்ட தேதி? உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர்.

தொடர்ந்து ஒவ்வொரு வாகனமாக முன்பக்கத்தினை திறந்து பார்த்து என்ஜின் ஆயில் தரத்தினை ஆய்வு செய்தார். மேலும் வாகனத்தை இயக்கச்சொல்லி உடனடியாக வாகனம் இயங்குகிறதா? என்பதை பார்த்தார். மேலும் வாகனத்தில் முதலுதவி பெட்டி உள்ளதா?, பராமரிக்கப்படுகிறதா? என்பது உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.

தொடர்ந்து காவல்துறையில் பிற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், விரைவுப்படை வாகனங்களையும் அவர் ஆய்வு செய்தார். கதவுகள் முறையாக மூடப்படுகிறதா?, சுத்தமாக வைத்துள்ளனரா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார்.

விளக்கம் கேட்டு நோட்டீஸ்

ஆய்வின்போது சில வாகனங்கள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சில வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது. சில வாகனங்கள் சர்வீஸ் செய்யப்படாமல் இருந்தது. இவ்வாறு குறைகள் கண்டறியப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 6 நான்கு சக்கர வாகனங்கள் என 8 வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். மேலும் பழைய வாகனங்களை முறையாக பராமரித்து வைத்திருந்த 4 வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். முறையாக பராமரிக்கும் அதிகாரிகளுக்கு அரசு புதிய வாகனங்கள் வழங்கினால் அவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆய்வின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்