ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ்

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் கைத்தளா பகுதியில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Update: 2023-04-02 18:45 GMT

கோத்தகிரி, 

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் கீழ் கைத்தளா பகுதியில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது.

சாலை விரிவாக்கம்

நீலகிரி மாவட்டத்தில் வருகிற மே மாதம் கோடை விழா நடைபெறுகிறது. இதை கண்டு ரசிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்கும் வகையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு, அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்லும்.

நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பலகைகள் மற்றும் வழிகாட்டி பலகைகள் சாலையோரங்களில் வைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை அரவேனு கீழ் கைத்தளா பகுதியில் உள்ள குறுகிய வளைவை விரிவாக்கம் செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

நோட்டீஸ்

இதனால் சாலை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் உள்ளதால், அந்த இடத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கோத்தகிரி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்திற்கு உட்பட்ட கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலை கைத்தளாவில் நில அளவை செய்ததில், நெடுஞ்சாலை இடத்தில் வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த இடத்தில் சாலை மேம்பாடு பணிகள் நடைபெற உள்ளதால், தாங்களாகவே உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

தவறும் பட்சத்தில் காவல்துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, அதற்குண்டான செலவு சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த நோட்டீஸ் அப்பகுதியில் உள்ள 25 ஆக்கிரமிப்பு வீடுகளின் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் ஜக்கனாரை ஊராட்சி தலைவர், கீழ் கைத்தளா பகுதியில் அகற்றப்படும் வீடுகளுக்கு மாற்றாக வேறு பகுதியில் நிலம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்