அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்

Update: 2023-03-29 18:45 GMT

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்காத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார். முன்னதாக, கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் அளித்திருந்த மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

அப்போது பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் பிரச்சினை குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை எப்படி கூற முடியும் என்று மாவட்ட கலெக்டர் கேள்வி எழுப்பினார். மேலும் கூட்டத்தில் கலந்து கொள்ளாத அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

தொடர்ந்து விவசாயிகள் பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி பேசினர். அதன் விவரம் வருமாறு:-

கழுமலை ஆற்றில் கழிவுநீர் கலப்பு

குத்தாலம் கல்யாணம்: என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்கம் செய்வதற்கான பணிகள் தொடங்கினால் தேவையான கரும்பை விவசாயிகள் உற்பத்தி செய்துகொடுப்பார்கள். தற்போது கோடைகாலம் தொடங்கிவிட்டது. பம்புசெட் மூலம் சாகுபடி செய்யும் போது மின் டிரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைகிறது. மாற்றுவதற்கு பல நாட்கள் ஆகிறது எனவே டிரான்ஸ்பார்மர்கள் மாவட்டத்தில் கையிருப்புவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜேஷ்: கழுமலையாற்றில் கழிவுநீர் கலப்பதால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன. அதில் இருந்து பாசனவசதி பெறும் குளங்களும் மாசுபடுகிறது. கழுமலையாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுத்து அதில் இருந்து குளங்களுக்கு தண்ணீர்கொண்டு சென்று சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் அலைகழிப்பு

திருக்கடையூர் ராமமூர்த்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகா மழையால் அதிகமாக பாதிக்கப்பட்டது. பயிர்கள் சேதமடைந்ததால் கூட்டுறவு வங்கிகளின் வாங்கிய குறுகியகால கடன்களை நீண்டகால கடனமாற்ற மாற்றுவதற்கு அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். பயிர்காப்பீட்டுத்தொகை தரங்கம்பாடி தாலுகாவில் 10 கிராமங்களுக்கு விடுப்பட்டுள்ளது அவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குருகோபிகணேசன்: இந்த ஆண்டு மழையால் உளுந்து, பயறு சேதமடைந்துள்ளது அதற்கான இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. பம்புசெட் மின்இணைப்பு பெறுவதற்கு விவசாயிகள் அலைகழிக்கப்படுகின்றனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

ராஜேந்திரன்: மணல்மேடு பகுதியில் 2 ஆயிரத்து 500 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பாண்டு பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றை விற்பனை செய்வதற்கு 20 கி.மீ. துரமுள்ள மயிலாடுதுறை, குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே மணல்மேடு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரதராஜன்: புதுமண்ணியாற்றின் வைரவரன் இன்படிபள்ளம் வாய்க்கால் தலைப்பில் தடுப்பணை அமைக்க வேண்டும். அகரவட்டடம் ஆதிதிராவிடர் மக்களுக்கான சுடுகாடு செல்லும் சாலை மற்றும் கொட்டகை வசதி செய்துகொடுக்க வேண்டும். கூட்டுறவு பண்டகசாலைகளில் இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய அரிசி வகைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், வேளாண் இணை இயக்குனர் சேகர், கூட்டுறவு இணை இயக்குனர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்