வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 9 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 9 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு நேற்று காலை கலெக்டர் அமர்குஷ்வாஹா சென்றார். அங்கு அலுவலக பதிவேடுகளையும், பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அதில் கிராம ஊராட்சிகள் துறையில் பதிவேடுகளை சரிவர பராமரிக்காமலும், பல்வேறு பிரிவுகளில் இ- ஆபிஸ் மூலம் பணிகள் நடைபெறவில்லை எனவும் கண்டறிந்தார், அதன் பேரில் அந்தப்பிரிவில் பணியாற்றி வரும் 8 பணியாளர்களுக்கும், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஆலங்காயம் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்ற கலெக்டர் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) பிச்சாண்டி, ஆலங்காயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.