செல்லூர் ராஜூ குறித்த எனது கருத்தை மாற்றிக்கொள்ளப் போவது இல்லை- அண்ணாமலை பதிலடி
செல்லூர் ராஜூ குறித்த எனது கருத்தை மாற்றிக்கொள்ளப் போவது இல்லை என அண்ணாமலை கூறினார்.
செல்லூர் ராஜூ குறித்த எனது கருத்தை மாற்றிக்கொள்ளப் போவது இல்லை என அண்ணாமலை கூறினார்.
அர்ஜூன் சம்பத் பங்கேற்பு
மதுரையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மாலையில் பெரியார் பஸ் நிலையம் பகுதியில் பாதயாத்திரைைய தொடங்கினார். தெற்கு ஆவணி மூலவீதி, விளக்குத்தூண் வழியாக தெப்பகுளம் பகுதியில் நிறைவு செய்தார். இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். இதைதொடர்ந்து அண்ணாமலை தெப்பக்குளம் பகுதியில் பேசியதாவது:-
தமிழகத்தில் தமிழ் வளர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணம் மதுரை தான். நான்காவது தமிழ் சங்கத்தை தாண்டி ஐந்தாவது தமிழ் சங்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர், பிரதமர் மோடி. தமிழுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். ஆனால் தி.மு.க. அரசு, தமிழை வைத்து அரசியல் செய்து வருகிறது.
குடிகாரர்கள் மீது எங்களுக்கு கோபமில்லை, உங்களை குடிக்க வைக்கிற அரசின் மீதுதான் எங்களுக்கு கோபம். கம்யூனிஸ்டு கட்சிக்காரர்களை நம்பக்கூடாது. சினிமா நடிகரை கீழடிக்கு மதுரை எம்.பி. அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார். மக்கள் வெளியே, சினிமா நடிகர்களுக்கு உள்ளே அனுமதி என்ற நிலை உள்ளது என்றார்.
தலைமையில் மாற்றம் வரும்
இதைெதாடர்ந்து நிருபர்களுக்கு அண்ணாமலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குறித்து நான் பேசிய கருத்தை மாற்றிக் கொள்ளப்போவது இல்லை. அவரை பற்றி பேசி நான் என் தரத்தை குறைத்து கொள்வதும் இல்லை. ராகுல்காந்தி மீண்டும் நாடாளுமன்றம் வருவது நல்லதுதான். அப்போது தான் அவர் ஏதாவது சேட்டை செய்து பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க உதவி செய்வார்.
வாழ்வா சாவா தேர்தல் பா.ஜ.க.வுக்கு அல்ல, தி.மு.க.வுக்கு தான். இந்த தேர்தலில் தி.மு.க. தோற்றால் அக்கட்சியில் மாற்றம் வரும். உட்கட்சி தேர்தலை நியாயமாக நடத்தினால் கனிமொழி தி.மு.க. தலைவர் ஆவார்.
அமித்ஷா சொன்னது என்னவென புரிந்து கொள்வதற்கு முதல்-அமைச்சருக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது. நம்முடைய தாய் மொழியில் எல்லா கல்வியும் மாற வேண்டும் என்பதில் அமித்ஷா உறுதியாக உள்ளார். மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மக்களிடம் ஆக்கப்பூர்வமாக பேசுவதற்கு தெரியாது. அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை. பிரதமர் மோடி, இந்தி தொன்மையான மொழி என பேசியிருந்தால் அந்த ஆதாரத்தை காட்டுங்கள். தமிழ் மொழி போல எந்த மொழியும் கிடையாது என பிரதமர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்றைய பாதயாத்திரையில் மாநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன், பொதுச்செயலாளர் ராஜ்குமார், கிழக்கு மாவட்ட தலைவர் ஏ.பி.ராஜசிம்மன், பொதுச் செயலாளர்கள் மூவேந்தரன், மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், திருமோகூர் ஹரி, ஓ.பி.சி. அணி கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கரன், கிழக்கு மண்டல தலைவர் பூமிநாதன், மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் வெள்ளைச்சாமி, கட்கம் ரவிச்சந்திரன், கல்வாரி தியாகராஜன், செல்வமாணிக்கம், குறிஞ்சி அரவிந்த், பிரபாகரன், கிருஷ்ணகுமார், பாக்யராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.