கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம்
வால்பாறையில் கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தார். தேயிலை தோட்டத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வால்பாறை,
வால்பாறையில் கரடி தாக்கி வடமாநில தொழிலாளி படுகாயம் அடைந்தார். தேயிலை தோட்டத்தில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கரடி தாக்கியது
வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த புத்வாஓரான் (வயது 29) தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று காலையில் புத்வாஓரான், 7 தொழிலாளர்களுடன் 36-ம் நம்பர் தேயிலை தோட்டத்தில் தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் கரடி தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது.
பின்னர் திடீரென கரடி புத்வாஓரான் மீது காய்ந்து தாக்கியது. இதனால் அவர் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கரடி புத்வாஓரானின் காலில் கடித்துவிட்டு சென்றது. இதனால் படுகாயம் அடைந்த அவரை தொழிலாளர்கள் மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவனமாக இருக்க வேண்டும்
தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் ஆஸ்பத்திரிக்கு புத்வாஓரானை பார்வையிட்டனர். பின்னர் வனத்துறை மூலம் ரூ.5 நிவாரணம் வழங்கப்பட்டது. தொடர்ந்து வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் வனத்துறையினர் மற்றும் எஸ்டேட் நிர்வாகத்தினர் சம்பவம் நடந்த தேயிலை தோட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். மேலும் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேயிலை தோட்டத்தில் தொழிலாளியை கரடி தாக்கியதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். குரங்குமுடி எஸ்டேட் பகுதி மக்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வால்பாறையில் தொழிலாளர்களை தேயிலை தோட்ட பணிக்கு அனுப்புதற்கு முன்பு, அங்கு வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதை அறிந்து அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.