வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது தாக்குப்பிடிக்குமா கொல்லிமலை தரைப்பாலம்?

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும்போது கொல்லிமலையில் இருந்து வெள்ளநீரில் தரைப்பாலம் தாக்குப்பிடிக்குமா? என்கிற சந்தேகம் எழுந்து உள்ளது. எனவே அதன் உறுதி தன்மையை அதிகாரிகள் ஆய்வு செய்து வலுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-10-13 19:02 GMT

சேந்தமங்கலம்

பொம்மசமுத்திரம் ஏரி

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பொம்மசமுத்திரம் ஏரி சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த ஏரி சேந்தமங்கலம் பேரூராட்சி காந்திபுரத்தில் இருந்து கொல்லிமலை அடிவாரத்திற்கு செல்லும் வழியில் அமைந்து உள்ளது. இந்த ஏரியை ஆழப்படுத்தும் பணி பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருப்பதால், அங்கு தற்போது குறைந்த அளவே நீரை சேமிக்க முடிகிறது.

மேலும் அங்கு சீமை கருவேல மரங்கள் அதிகமாக முளைத்து காணப்படுவதால் அதனுடைய ஆக்கிரமிப்பு இருந்து வருகிறது. காந்திபுரம் ராமநாதபுரம்புதூர் போன்ற பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலத்திற்கு அந்த ஏரியின் நீர் பயனாக இருந்து வருகிறது.

பாலத்தில் விரிசல்

கொல்லிமலையில் பலத்த மழை பெய்யும் போதெல்லாம், பெரிய ஆற்றின் வழியாக வெள்ளநீர் பாய்ந்து அடிவாரத்தில் உள்ள ஆறுகள் மூலமாக பொம்மசமுத்திரம் ஏரிக்கு தான் தண்ணீர் முதலில் வருகிறது. அந்த ஏரியின் உபரி நீர் வெளியேறும் பகுதியில் காந்திபுரம் - காரவள்ளி பிரதான சாலை செல்வதால் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக அங்கு தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இந்த சாலை கொல்லிமலைக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் முக்கிய சாலையாகும். அந்த பாலத்தின் அடியில் தற்போது சில இடங்களில் விரிசல் காணப்பட்டு வருகிறது. எனவே அதன் உறுதி தன்மையை ஆய்வு செய்து, தரைப்பாலத்தை வலுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து உள்ளது.

உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும்

இது குறித்து மனவளக்கலை பேராசிரியர் ஜெயபால் கூறியதாவது:-

சேந்தமங்கலம் பகுதி விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக பொம்மசமுத்திரம் ஏரி விளங்கி வருகிறது. அந்த ஏரியின் உபரிநீர் சோமேஸ்வரர் ஓடை வழியாக சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள பொன்னார்குளம் ஏரிக்கு செல்கிறது. தற்போது அந்த பகுதி குறுகலாக இருப்பதால், சற்று அகலப்படுத்த வேண்டும். இதனால் கூடுதல் நீர் கிடைக்கும். அப்பகுதியில் உள்ள கிணறுகளின் நீர்மட்டம் வெகுவாக உயரும்.

மேலும் ஏரி அருகே உள்ள தரைப்பாலம் பழமை வாய்ந்ததாக இருப்பதால் அதன் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். ஏனென்றால் தற்போது மழைசீசன் தொடங்குவதற்கு முன்பாகவே அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளநீர் அங்கு பாய்ந்து செல்வதால், அதன் உறுதித் தன்மையை பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

Tags:    

மேலும் செய்திகள்