நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம்

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி தேரோட்டம் நடந்தது.

Update: 2023-04-10 19:27 GMT

அன்னவாசல்:

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள நார்த்தாமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா பூச்சொரிதல், கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2-ந் தேதி பங்குனி திருவிழா கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதையொட்டி தினமும் முத்துமாரியம்மன் அன்னம், ரிஷபம், குதிரை, சிம்மம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் பொங்கல் விழாவும், பாரி வேட்டை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பல்வேறு சாமி வேடமிட்டு கோவிலுக்கு ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

சிறப்பு அபிஷேகம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் முத்துமாரியம்மனுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக சத்தியமங்கலம், நார்த்தாமலை, அன்னவாசல், கீரனூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்திக்கொண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல கரும்பால் தொட்டில் கட்டி குழந்தைகளை அதில் வைத்து கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தேரோட்டம்

இதைத்தொடர்ந்து மாலை 3.20 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் முத்து மாரியம்மன் எழுந்தருளினார். தேரோட்டத்தை மாவட்ட கலெக்டர் கவிதாராமு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, திருநாவுக்கரசர் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் பக்தி கோஷம் முழங்க தேர் கம்பீரமாக வீதியில் பவனி வந்தது.

ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் குவிந்து நின்று முத்துமாரியம்மனுக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர் மாலை 5.50 மணியளவில் தேர் கோவில் நிலையை வந்தடைந்தது. அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தவாரி

தேரோட்டத்தை தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முன்னதாக காலையில் முத்துமாரியம்மன் கோவிலில் எழுந்தருளி அங்கிருந்து ஊர்வலமாக ஆகாச ஊரணிக்கு வந்து சேருகிறார். தொடர்ந்து அங்கு அம்மனுக்கு காப்பு கலைத்தல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழாவுடன் பங்குனி திருவிழா நிறைவுபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்