சேலத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சேலத்தில் வடமாநில வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வளையல் கடை
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் பாசாராம். இவருடைய மகன் திலீப்குமார் (வயது 20). இவர் சேலம் கோட்டை சையத்கான் தெருவில் வசித்து வரும் தனது மாமா ரமேஷ்குமார் வீட்டில் தங்கியிருந்து வளையல் கடை ஒன்றில் வேலை பார்த்துவந்தார். நேற்று முன்தினம் இரவு ரமேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சேலம் 5 ரோடு அருகே ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற தசரா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றுவிட்டார்.
பின்னர் அவர்கள் அங்கு நிகழ்ச்சி முடிந்த பிறகு நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் திலீப்குமார் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் தகவல்கொடுத்தனர்.
போலீசார் விசாரணை
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் திலீப்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து தகவல் அறிந்ததும் அவருடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலத்துக்கு விரைந்துள்ளனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தான், குடும்ப பிரச்சினையால் திலீப்குமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.