நகை- வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர் கைது
115 பவுன் நகை- 600 கிராம் வெள்ளி பொருட்கள் திருடிய வழக்கில் வடமாநில வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நகை-பணம் திருட்டு
கரூர் மாவட்டம், புகழூர் காகித ஆலையில் ஸ்டோர் மேலாளராக அண்ணாதுரை (வயது 55) பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஜூலை மாதம் 6-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மகனின் படிப்பு விஷயமாக குடும்பத்தினருடன் சென்னை சென்றிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 115 பவுன் நகைகள், 600 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்தார்.இதையடுத்து மர்மநபர்களை பிடிக்க அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வந்தது.
கைது
இந்நிலையில் சேலம் போலீசார் அங்கு நடந்த ஒரு திருட்டு சம்பந்தமாக மத்திய பிரதேசம் மாநிலம் தார் மாவட்டம் குக்சி அருகே உள்ள பகோலி கிராமத்தை சேர்ந்த ஜெகதீஷ் பில் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர் தான் அண்ணாதுரை வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள், பணத்தை திருடினார் என்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
தீவிர விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் சேலம் சென்று, ஜெகதீஷ்பில்லை அழைத்து வந்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவரை நேற்று விசாரணைக்கு வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.