திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலி
திண்டுக்கல்லில் ரெயிலில் அடிபட்டு வடமாநில தொழிலாளி பலியானார்.
மேற்கு வங்காள மாநிலம் கோத்ரா பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் ஷாஜி (வயது 30). இவர், தனது குடும்பத்துடன் திண்டுக்கல் வேடப்பட்டியில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், வேடப்பட்டி ஒத்தக்கண்பாலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.