கீரிப்பாறை அருகே பெருஞ்சாணி அணையில் மூழ்கி வடமாநில தொழிலாளி சாவு

கீரிப்பாறை அருகே பெருஞ்சாணி அணைக்கரையில் குளிக்கச் சென்ற வடமாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-05-25 18:12 GMT

அழகியபாண்டியபுரம்:

கீரிப்பாறை அருகே பெருஞ்சாணி அணைக்கரையில் குளிக்கச் சென்ற வடமாநில தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

வடமாநில தொழிலாளி

தடிக்காரன்கோணம் அருகே உள்ள காளிகேசம் அரசு ரப்பர் கழகத்தின் 42-வது கூப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான அரசு தோட்டங்கள் உள்ளன. இங்கு தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவர் ேதாட்டங்களை குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார். இவருடைய தோட்டத்தில் ஜார்கண்ட் மாநிலம் ஜெகன்ச்சா பகந்திட் பகுதியை சேர்ந்த ஜெகன்சிங் (வயது54) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய குடும்பத்தினர் ஜார்கண்டில் உள்ளனர்.

இதனால், ஜெகன்சிங் தன்னுடன் வேலை செய்து வரும் நண்பர்களான 2 வடமாநில தொழிலாளிகளுடன் காளிகேசம் அரசு ரப்பர் கழக குடியிருப்பில் வசித்து வந்தார்.

தண்ணீரில் மிதந்தார்

ஜெகன்சிங்கிற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் தினமும் வேலை முடிந்ததும் காளிகேசம் அரசு ரப்பர் கழக குடியிருப்பின் பின்பகுதியில் உள்ள பெருஞ்சாணி அணையின் கரை பகுதியில் குளிக்கச் செல்வது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வேலையை முடித்துவிட்டு குளிக்க சென்றுள்ளார். சிறிது நேரத்தில் அவருடன் வேலை செய்யும் சக தொழிலாளர்களான தீபக், விவேக் ஆகியோரும் அணை பகுதியில் குளிக்க சென்றனர். அப்போது, அங்கு ஜெகன்சிங் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

சாவு

உடனே, இதுபற்றி குத்தகைதாரர் நாகராஜனுக்கு தகவல் தெரிவித்தனர். நாகராஜன் விரைந்து சென்று ஜெகன்சிங்கை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஜெகன்சிங் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கீரிப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், ஜெகன்சிங் மதுபோதையில் அணையில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்