பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்டபள்ளத்தில் மண் சரிந்து வடமாநில தொழிலாளி பலிதிண்டிவனத்தில் சோகம்

திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மண் சரிந்து வடமாநில தொழிலாளி பலியானாா்.

Update: 2023-05-11 18:45 GMT


திண்டிவனம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று, 19-வது வார்டு ரொட்டிக்கார தெருவில் இத்திட்டத்துக்காக குழாய் பதிப்பதற்காக, பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி நடந்தது.

இதில், மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சிராஜ் மீஞ்சூ(வயது 22), ஜித்தர் நந்தி, திலஸ்கோ காகா, அமித் நாயக் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

சரிந்து விழுந்த மண்

அப்போது அங்கு தோண்டப்பட்ட சுமார் 8 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் சிராஜ் மீஞ்சூ இறங்கி நின்றார். மற்ற 3 பேரும், மேல் பகுதியில் நின்றுகொண்டிருந்தனர். பணி நடந்த இடம் குறுகலான தெரு என்பதால் தோண்டப்பட்ட மண், பள்ளத்தின் பக்கவாட்டில் சுற்றிலும் குவித்து வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், திடீரென அந்த பள்ளத்திற்குள் எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத சிராஜ் மீஞ்சூ உள்ளே சிக்கிக்கொண்டார். அவர் மீண்டு வர முயன்றும், அவரால் வெளியே வர முடியவில்லை. முழுவதுமாக அவரை மண் மூடிவிட்டது.

சாவு

உடன் மற்ற 3 தொழிலாளர்களும் கூச்சலிட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடோடி வந்து மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே தகவல் அறிந்த திண்டிவனம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, சரிந்து விழுந்த மண்ணை அப்புறப்படுத்தி, அவரை மீட்டனர்.

தொடர்ந்து அவரை அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ்சில் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திரண்டுவந்த மக்கள்

இதற்கிடையே, சம்பவம் நடந்த இடத்துக்கு பொதுமக்கள் அதிகளவில் திரண்டு வந்தனர். அதற்குள், பாதாள சாக்கடை பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர்கள் 2 பொக்லைன் எந்திரங்களை கொண்டு, அவசர அவசரமாக அந்த பள்ளத்தை மூடிவிட்டு, சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்