மண் பிரிக்கும் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

குளித்தலை அருகே மண் பிரிக்கும் எந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலியானார். இது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிந்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-10 18:51 GMT

வடமாநில தொழிலாளி பலி

குளித்தலை அருகே உள்ள அய்யர்மலை பகுதியில் செயல்பட்டு வரும் மைன்ஸ் கிரசரில் அசாம் மாநிலத்தை சேர்ந்த காரேஸ்வர்போரோ (வயது 23) என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று அங்கு உள்ள மண் பிரிக்கும் எந்திரம் ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் காரேஸ்வர்போரோ ஈடுபட்டுள்ளார். அந்த எந்திரம் இயங்கிக் கொண்டிருந்ததால் அவர் சுத்தம் செய்யும்போது அந்த எந்திரத்தில் அவரது தலை சிக்கி பலத்த காயம் அடைந்தார்.

இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் காரேஸ்வர்போரோவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

2 பேர் மீது வழக்கு

இதுகுறித்து அந்த கிரசர் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த திலீப்சாகர் (53) என்பவர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்பேரில், வேலை செய்யும் தொழிலாளிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அறிவுரை வழங்காத அந்த கிரசர் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும் தேனி மாவட்டம் உப்பு கரை பகுதியை சேர்ந்த சிலம்பரசன் (32), குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டி பகுதியை சேர்ந்த ஹரி பாஸ்கர் (35) ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்