இரும்பு பட்டறை தொழிலை பாரம்பரிய முறைப்படி செய்யும் வடமாநில தொழிலாளர்கள்

அதிராம்பட்டினம் பகுதியில் இரும்பு பட்டறை தொழிலை வடமாநில தொழிலாளர்கள் பாரம்பரிய முறைப்படி செய்து வருகிறார்கள். இவர்கள் வடிவமைக்கும் அரிவாள், கோடரிகளுக்கு தனி மவுசு உள்ளது.

Update: 2023-01-09 19:48 GMT

அதிராம்பட்டினம் பகுதியில் இரும்பு பட்டறை தொழிலை வடமாநில தொழிலாளர்கள் பாரம்பரிய முறைப்படி செய்து வருகிறார்கள். இவர்கள் வடிவமைக்கும் அரிவாள், கோடரிகளுக்கு தனி மவுசு உள்ளது.

இரும்பு கருவிகள்

நாம் அன்றாட வாழ்க்கையில் தங்கம், வெள்ளி, பித்தளை, செம்பு, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட உலோகங்களால் ஆன பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். இதில் இரும்பு உலோகத்திற்கு தனி இடம் உண்டு.

இரும்பு கடினமானதாக இருப்பதால் தான் அதன் மூலம் அரிவாள், மரம் வெட்ட உபயோகப்படும் கோடரி, இறைச்சிகளை வெட்டும் கத்தி, சிற்பம் செதுக்கும் உளி உள்ளிட்ட கருவிகள் வடிவமைக்கப்படுகின்றன. இத்தகைய இரும்பு கருவிகளுக்கு சந்தையில் எப்போதும் வரவேற்பு உண்டு. இரும்பு பட்டைகள், கம்பிகளை சூடேற்றி அதற்கு பொருள் வடிவம் கொடுக்கும் தொழிலை செய்வோர் கொல்லர் என அழைக்கப்படுகிறார்கள்.

குடும்பத்துடன்...

இரும்பு பட்டறை தொழிலை பரம்பரை பரம்பரையாக செய்து வரும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அதிராம்பட்டினம் காலேஜ் முக்கம், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள், கத்தி, கோடரி உள்ளிட்ட இரும்பு கருவிகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இதற்காக அவர்கள் சாலை ஓரத்தில் கொட்டகை அமைத்து குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

பாரம்பரிய முறை

சூடேற்றப்பட்டு இரும்பு பட்டையின் தன்மை இளகியவுடன் 2 பேரை கொண்டு சம்மட்டியால் அடித்து, அதற்கு லாவகமாக வடிவம் கொடுக்கின்றனர். பின்னர் தங்கள் கைவண்ணத்தில் உருவான இரும்பு கருவிகளான அரிவாள், கோடரி, கத்தி உள்ளிட்டவற்றை அங்கு தரையில் பரப்பி வைத்து ஒரு குறிப்பிட்ட தொகைக்கு விற்கின்றனர்.

பாரம்பரிய முறைப்படி இவர்கள் தயாரிக்கும் அரிவாள், கோடரி உள்ளிட்ட கருவிகளுக்கு தனி மவுசு உள்ளது.

அரிவாள்- கோடரி

அரிவாள் உள்ளிட்ட கருவிகள் வெளிப்படையாக செய்யப்படுவதால் அந்த வழியாக செல்வோர் பலர் வாகனங்களை நிறுத்தி கருவிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கிறார்கள். சிலர் இரும்பு கருவிகளை செய்வதை வேடிக்கையும் பார்க்கிறார்கள். அரிவாள்- ரூ.350, பெரிய கோடரி- ரூ.650, சிறிய கோடரி-ரூ.450, இறைச்சி வெட்ட பயன்படுத்தும் கத்தி- ரூ.200, ரூ.100, களைவெட்டும் கருவி- ரூ.200, ரூ.400, உளி-ரூ.100, விறகினை பிளக்கும் வெட்டரும்பு-ரூ.150, தொரட்டியில் கட்டப்படும் சிறிய அரிவாள்- ரூ.100 என்ற விலைகளில் கருவிகள் விற்பனை செய்யப்படுகின்றன.

வயிற்றுப்பிழைப்பு...

இது தொடர்பாக வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில், 'மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த நாங்கள் வயிற்று பிழைப்புக்காக தமிழகத்திற்கு வந்தோம். பின்னர் ஒவ்வொரு மாவட்டமாக சென்று இரும்பு கருவிகளை வெட்டவெளியில் தயாரித்து விற்று வருகிறோம். தத்ரூபமாக இரும்பு கருவி செய்வதை பலர் ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்கிறார்கள். வயிற்று பிழைப்பு ஒருபுறம் இருந்தாலும், பாரம்பரிய தொழில் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த தொழிலை விடாமல் செய்து மக்களுக்கு பயனுள்ள கருவிகளை வழங்கி வருகிறோம்' என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்