புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுரை
வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக புயல் பாதுகாப்பு மையங்கள், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் தேவையான பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல்மிஸ்ரா அறிவுறுத்தினார்.
பணிகளை முடிக்க வேண்டும்
மேலும், மாநகராட்சி, நகராட்சிகள், பேருராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
அனைத்து பணிகளையும் துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து துரிதமாக பணிகளை முடிக்க வேண்டும். இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறக்கூடாது என அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.